ஶ்ரீவில்லிபுத்தூர்: அருப்புக்கோட்டை அருகே மன வளர்ச்சி குன்றிய 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 80 வயது முதியவர், முன்னாள் ஊராட்சி செயலர் உட்பட 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஶ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை கூலித் தொழிலாளிக்கு இரு மகள்கள், ஒரு மகன் என மூன்று குழந்தைகள் உள்ளனர். மூவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். கூலி தொழிலாளியின் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டு, வீட்டை விட்டு சென்று விட்டார். கூலி தொழிலாளி உயிரிழந்த நிலையில், குழந்தைகள் மூவரும் காப்பகத்தில் தங்கி படித்து வந்தனர். பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி தென்காசியில் உள்ள காப்பகத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டதால் உறவினர் வீட்டுக்கு வந்த சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த 4 பேர், வெவ்வேறு சமயங்களில் தனித்தனியாக பாலியல் தொல்லை அளித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கடந்த 2023-ம் ஆண்டு மே 8-ம் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, முருகன்(53), முன்னாள் ஊராட்சி செயலர் பாண்டியராஜ்(44), ஜவகர்(46), தேவராஜ்(80) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
வழக்கு விசாரணை ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் ஜூன் 27-ம் தேதி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முருகன், பாண்டியராஜ், ஜவகர், தேவராஜ் ஆகிய 4 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுதாகர் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் முத்துமாரி ஆஜரானார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.