ஆவடி அருகே மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை: திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு


 மதன் 

திருவள்ளூர்: ஆவடி அருகே மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள கண்ணப்பாளையம், பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் சரிதா. இவருக்கு திருமணம் நடந்து, 8 வயது பெண் குழந்தை இருந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சரிதா, கண்ணப்பாளையம் அடுத்த மேம்பாக்கத்தைச் சேர்ந்த மதன்(39) என்பவரை காதலித்து, கடந்த 2019-ம் ஆண்டு மறுமணம் செய்து கொண்டார். மதன்-சரிதா தம்பதிக்கு மேடினா என்ற பெண் குழந்தை உள்ளது. மதன், சரிதா பெயரில் கண்ணப்பாளையம் பகுதியில் மாட்டிறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி மதனுக்கும், சரிதாவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியது. அதன் விளைவாக மதன் இரும்பு குழாயால் சரிதாவை அடித்துக் கொன்றுள்ளார்.

இதுகுறித்து, சரிதாவின் சகோதரி அம்மு அளித்த புகாரின் அடிப்படையில், ஆவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மதனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், அரசு தரப்பில் வழக்கறிஞர் அமுதா வாதிட்டார். முடிவுக்கு வந்த விசாரணையில், மதன் மீதான குற்றம் நிரூப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை, திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ரேவதி நேற்று அளித்தார். அதில், சரிதாவை கொன்ற குற்றத்துக்கு, மதனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரேவதி உத்தரவிட்டுள்ளார். மேலும், தற்போது 15 வயது பூர்த்தியடைந்த சரிதாவின் முதல் குழந்தைக்கு அரசு உதவி தொகையாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் நீதிபதி தன் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

x