விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை தார் தொட்டியில் போட்டு எரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பேர் இன்று (மார்ச் 12) கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி (62). இவர் முன்னாள் ராணுவ வீரர். ராணுவத்தில் ஓய்வுபெற்ற பிறகு, ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி மலர்விழி. திருப்பத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். துரைப்பாண்டியின் சொந்த ஊர் காரியாபட்டி அருகே உள்ள அழகியநல்லூர். இங்கு சொந்தமாக வீடு கட்டியுள்ளார்.
அவ்வப்போது இங்கு வந்து துரைப்பாண்டி தங்குவது வழக்கம். வீட்டிலிருந்த துரைப்பாண்டி திடீரென தலைமறைவானார். குடும்பத்தினர் தொடர்புகொண்டபோது அவரது செல்போன் அணைக்கப்பட்டிருந்தது. மேலும், அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லாததால் துரைப்பாண்டியை காணவில்லையென அவரது மனைவி மலர்விழி குன்றக்குடி காவல் நிலையத்தில் கடந்த 1-ம் தேதி புகார் அளித்தார். போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
துரைப்பாண்டி வங்கிக் கணக்கை ஆய்வு செய்தபோது காரியாபட்டி அருகே உள்ள அழகிநயநல்லூரைச் சேர்ந்த பாண்டி (28), ஒண்டிப்புலி நாயக்கனூரைச் சேர்ந்த ராம்குமார் (27) ஆகியோருக்கு துரைப்பாண்டி தனது வங்கிக் கணக்கிலிருந்து பணப்பரிமாற்றம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் இருவரும் காரியாபட்டி அருகே உள்ள ஜோகில்பட்டியில் உள்ள ஒரு தார் குடோனில் பணியாற்றி வருவதும், துரைப்பாண்டி கார் வாங்கியபோது இருவரும் கூடுதலாக கமிஷன் வாங்கியதும், இதனால் ஆத்திரமடைந்த துரைப்பாண்டி இருவரையும் போலீஸில் புகார் அளிப்பதாக மிரட்டியதும் தெரியவந்தது.
அதன்பின், தாங்கள் பணியாற்றும் தார் குடோனுக்கு வருமாறும், அங்கு முதலாளியிடம் பணத்தைபெற்றுத் தருவதாகவும் கூறி துரைப்பாண்டியை தார் குடோனுக்கு பாண்டியும் ராம்குமாரும் அழைத்துள்ளனர். அவர்களை நம்பி துரைப்பாண்டியும் அங்கு சென்றுள்ளார்.அப்போது, துரைப்பாண்டியை அவர்கள் இருவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் மயங்கி விழுந்து துரைப்பாண்டி இறந்துள்ளார். பின்னர், அவரது உடலை தார் தொட்டிக்குள் போட்டு தீயிட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பாண்டியையும் ராம்குமாரையும் போலீஸார் புதன்கிழமை கைதுசெய்தனர். சம்பவ இடத்தில், எஸ்.பி. கண்ணன், அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி. மதிவாணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், தீயணைப்புத் துறையினர் மூலம் தார் தொட்டியில் போடப்பட்ட துரைப்பாண்டி உடலை மீட்கும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.