திருப்பத்தூர் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை


இன்பகுமார்

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பனங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் இன்பகுமார் (26). இவரது மனைவி ஆஷா (21). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இன்பகுமாரின் ஆட்டோவில் தினசரி பயணித்த 16 வயது பள்ளி சிறுமியுடன் அவர் நெருங்கி பழகியுள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு அவரை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்துள்ளார். இதில், அந்த சிறுமி கர்ப்பமடைந்த நிலையில் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பான புகாரின்பேரில் ஆம்பூர் மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இன்பகுமாரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை திருப்பத்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி மீனாகுமாரி முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கில் நீதிபதி நேற்று அளித்த தீர்ப்பில் இன்பகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

x