ஆன்லைன் விளையாட்டு விபரீதமா? - மதுரையில் மாடியிலிருந்து குதித்த 17 வயது சிறுவன் உயிரிழப்பு


சிறுவன் ஹரீஸ்   

மதுரை: மதுரையில் மாடியில் இருந்து குதித்த 17 வயது சிறுவன் உயிரிழந்தார். ஆன்லைன் விளையாட்டு விபரீதத்தால் அச்சிறுவன் உயிரிழந்ததாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை காமராஜர்புரம் பகுதியிலுள்ள வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் மொட்டை என்ற ஹரீஸ் (17). இவர் அப்பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்தார். தொடர்ந்து பள்ளிக்குச் செல்லாமல் கடந்த ஓராண்டாகவே வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டில் இருந்தபோது, ஹரீஸ் வீட்டின் மாடிப்பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர், திடீரென அலறல் சத்தம் கேட்டதையடுத்து, அவரது பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்துள்ளனர். மகனின் செல்போன் மாடியில் உடைப்பட்டுக் கிடந்தது.

ஹரீஸ் மாடியில் இருந்து கீழ குதித்திருப்பதும் தெரியவந்தது. உடனே ஹரீஸை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் கொண்டு சென்றனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி சிறுவன் ஹரீஸ் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீரைத்துறை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஹரீஸ் ஆன்லைன் விளையாட்டில் ஏற்பட்ட விபரீதத்தால் தற்கொலை செய்திருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “சிறுவன் பள்ளிக்கூடம் செல்லாத நிலையில், அடிக்கடி செல்போனில் ‘ப்ரீ பயர்’ விளையாடி இருக்கிறார். இதை அறிந்த பெற்றோர் அவரை கண்டித்த நிலையில், பெற்றோரை மிரட்டுவதற்காக, மாடிக்குச் சென்று செல்போனை உடைத்துவிட்டு, மாடியிலிருந்து குதித்து இருக்கலாம். அதேநேரம், ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக சிறுவன் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்,” என்றனர்.

x