பட்டா மாறுதலுக்கு ரூ.7000 லஞ்சம்: ஊத்துக்குளி அருகே கிராம நிர்வாக அலுவலர் கைது


ஊத்துக்குளி: திருப்பூர் மாவட்டம் அவிநாசி முருகம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (42). சமீபத்தில் ஊத்துக்குளி வட்டம் இடையபாளையத்தில் 2.25 ஏக்கர் நிலம் வாங்கினார். அந்த இடத்துக்கான சிட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக, இடையபாளையத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் உரிய ஆவணங்களோடு கார்த்திகேயன் விண்ணப்பித்திருந்தார்.

பட்டா பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் பிரபு (44) மற்றும் அவரது உதவியாளர் கவிதா (36) ஆகியோர் ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்டனர். இதனை கொடுக்க விரும்பாத கார்த்திகேயன், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, கார்த்திகேயனிடம் போலீஸார் கொடுத்தனர். அதை, கிராம நிர்வாக அலுவலர் பிரபு, உதவியாளர் கவிதாவிடம் கார்த்திகேயன் கொடுத்தார். அவர்கள் வாங்கும்போது, இருவரையும் கையும் களவுமாக திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

x