காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் முக்கிய ரவுடி வசூல்ராஜா நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் நேற்று இவரை கொலை செய்துவிட்டு தப்பியது.
காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வசூல்ராஜா(38). இவர் மீது கடந்த 10 ஆண்டுகளில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, செம்மரக் கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் திருக்காலிமேடு பகுதியில் வணிகம் செய்பவர்களிடம் அவ்வப்போது மிரட்டி பணம் பறித்து வந்தார். சிறையிலிருந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியில் வந்துள்ளார்.
வெளியே வந்த இவர் தனது நண்பர்களுடன் திருக்காலிமேடு பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது தலையில் ஹெல்மெட்டுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென வசூல்ராஜா மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில் நிலை குலைந்த அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். அவர் மீது மேலும் சில நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்துவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கில் வசூல்ராஜா ஏற்கெனவே குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அதே வகையில் நாட்டு வெடிகுண்டு வீசி வசூல்ராஜாவை ஒரு கும்பல் கொலை செய்துள்ளது. எனவே இந்தக் கொலை முன் விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என போலீஸார் தெரிவிக்கின்றனர். திருக்காலிமேடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உடற்கூறு பரிசோதனைக்காக வசூல்ராஜாவின் சடலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ரவுடிகளுக்குள் நிகழும் மோதலால் நடக்கும் கொலை, வசூல் வேட்டையால் நடக்கும் கொலைகள் என காஞ்சிபுரம் பகுதியில் ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. ரவுடிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளை போலீஸார் தீவிரப்படுத்தி வருகின்றனர்.