பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த திருப்பத்தூர் நர்சிங் கல்லூரி இயக்குநர் நீதிமன்றத்தில் சரண்!


விஜய் சீகன் பால்.

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே நர்சிங் கல்லூரி மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்த கல்லூரி இயக்குநர் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் சீகன் பால் (39).இவர். ஆம்பூர் புறவழிச்சாலையில் நர்சிங் கல்லூரி ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த ஜன. 20-ம் தேதி கல்லூரியில் லேப் டெக்னீஷியன் பாடப்பிரிவு படித்து வந்த 17 வயது மாணவியிடம், கல்லூரி இயக்குநர் விஜய் சீகன் பால் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனை, அதே கல்லூரியில் பணியாற்றி வரும் ஹேமாமாலினி என்பவர் மறைக்க முயன்று, கல்லூரி இயக்குநருக்கு ஆதரவாக மாணவியிடம் எதையும் வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையறிந்த விஜய் சீகன் பால் தலைமறைவானார்.

இது தொடர்பாக ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஹேமாமாலினியை கைது செய்து, தலைமறைவான விஜய் சீகன் பாலை தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட நீதிபதி மீனாகுமாரி முன்னிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த விஜய் சீகன் பால் நேற்று காலை சரணடைந்தார். அவரை, நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டார்.

x