திருவண்ணாமலை: வேட்டவலம் அருகே ஏரிக்கரையில் வெட்டி கொலை செய்யப்பட்ட புதுச்சேரி ரவுடி உடல் மீட்கப்பட்ட நிலையில், 10-க்கும் மேற்பட்ட நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே நீலங்காங்கல் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் வெட்டி கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல் கிடந்தது நேற்று காலை தெரியவந்தது. அவரது கழுத்து, முகம் மற்றும் கைகளில் வெட்டு காயம் இருந்தது. இதையடுத்து, வேட்டவலம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இளைஞரின் உடல் இருந்த இடத்தில் கிடந்த தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாயும், சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடின.
இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞரின் பெயர் ஐயப்பன்(38) என்பதும், புதுச்சேரி மாநிலம் வானரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, பாலியல் வழக்கு உட்பட 17 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும், பல்வேறு இடங்களில் சூதாட்டம் உட்பட பல தேவைகளுக்கு, அதிக வட்டிக்கு பணம் கொடுத்து, பின்னர் பணம் கொடுக்காதவர்களை மிரட்டி வசூலித்து வந்துள்ளதார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் கூறும்போது, “புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் ரவுடி ஐயப்பன். சரித்திர பதிவேடு குற்றவாளி. பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநில காவல்துறையினர் கெடுபிடி காரணமாக, தலைமறைவானார். அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை பகுதியில் பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த, அவருக்கு எதிரான ஒரு கும்பல், அவரை காரில் கடத்தி சென்று வெட்டி கொலை செய்துவிட்டு, வேட்டவலம் அருகே நீலங்தாங்கல் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் வீசிவிட்டு சென்றுள்ளது. மேலும் இக்கும்பல், அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரது மனைவியை கைபேசியில் தொடர்பு கொண்டு ரூ.6 லட்சத்தை பெற்றுள்ளதாக தெரியவருகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட பிறகே, இக்கொலை நடைபெற்றுள்ளது” என்றனர்.
இது குறித்து வேட்டவலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ரவுடி ஐயப்பன் கொலை வழக்கு தொடர்பாக புதுச்சேரி லாஸ்பேட்டை மற்றும் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம்(புதுச்சேரி அருகே உள்ள பகுதி) பகுதிகளைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதமா? அல்லது பணம் கொடுக்கல் வாங்கல் தகராறா? என்ற அடிப்படையில் விசாரணையை தனிப்படை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இக்கொலைக்கு உள்ளூர் நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.