சென்னை: மகாராஷ்டிராவில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கள்ளச்சாராயம் கடத்தி வந்து விற்றதாக தம்பதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பாடி மேம்பாலம் பகுதியில் அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இரு பெண்கள் உட்பட 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
அவர்கள், மகாராஷ்டிர மாநிலம் அமராவதி பகுதியை சேர்ந்த போஸ்லே பாபு (50), அவரது மனைவி நேபு பாபு போஸ்லே (50), அதே பகுதியைச் சேர்ந்த ரத்னேஷா அர்சிங்த் பவார் (28) என்பதும், அவர்கள் அந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பதும் தெரியவந்தது. மகாராஷ்டிராவில் உள்ள தங்களது சொந்த ஊரில் கள்ளச்சாராயம் காய்ச்சி, ரயில் மூலம் சென்னைக்கு கடத்தி வந்து விற்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்கள் வைத்திருந்த கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.