ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைதாகி சிறையில் இருக்கும் 2 பெண்கள் உட்பட 3 யூடியூப்பர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடியோ எடுப்பதாகக் கூறி 15 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்து யூடியூப்பில் வெளியிட்ட புகாரில் தஞ்சாவூரைச் சேர்ந்த திவ்யா (36), ஈரோட்டை சேர்ந்த கீழக்கரை என்ற கார்த்திக் (30), கடலூரைச் சேர்ந்த சித்ரா (48), ஆனந்தராமன் (24) ஆகிய 4 பேரை ஜனவரி 29-ம் தேதி போக்சோ சட்டத்தில் ஶ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் கைதான 4 பேரின் ஜாமீன் மனுக்கள் இரு முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இவர்களது நீதிமன்றக் காவல் 3 முறை நீட்டிக்கப்பட்டது. நாளையுடன் (மார்ச் 12) காவல் நிறைவடைய உள்ளது.
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட திவ்யா, கார்த்திக், சித்ரா ஆகியோர் மீது ஏற்கெனவே பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய விருதுநகர் மாவட்ட காவல் கணகாணிப்பாளர் கண்ணன் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் திவ்யா, சித்ரா, கார்த்திக் ஆகிய 3 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.