செங்குன்றம்: செங்குன்றம் அருகே விளாங்காடுபாக்கத்தில் ஆந்திராவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 53 டன் ரேஷன் அரிசியை குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம்,செங்குன்றம் விளாங்காடுபாக்கம் பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, விளாங்காடுபாக்கம் பகுதியில் குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் 53 டன் ரேஷன் அரிசி, ஆந்திராவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் 53 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜீ(40), சதீஷ்(29), சென்னையை சேர்ந்த ராஜேஷ்(24), துரைபாண்டியன்(19), புதுக்கோட்டையை சேர்ந்த அப்துல் ரஹீம்(47) ஆகிய 5 பேரை கைது செய்தனர். பதுக்கலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு லாரி மற்றும் 2 மினி லாரிகள், ஒரு மினி சரக்கு வேன், ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறையினர்.