போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில் இருந்து இலங்கை தப்பிச் செல்ல முயன்ற அக்கா, தம்பி கைது


துஷாந்தினி, அருண் குமரன்

சென்னை: போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையிலிருந்து இலங்கை தப்பிச் செல்ல முயன்ற அக்கா, தம்பியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இலங்கையைச் சேர்ந்த இருவர் போலி சான்றுகளை அளித்து, இந்திய பாஸ்போர்ட்டை பெற்று அதன் மூலம் இலங்கை தப்பிச் செல்ல உள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த அதிகாரிகள் நேற்று சென்னை விமான நிலையத்தில் கண்காணித்தனர்.

அப்போது, சந்தேகத்தின் பேரில் விமான நிலையத்தில் நின்றிருந்த இலங்கையைச் சேர்ந்த துஷாந்தினி (32), அவரது சகோதரர் அருண் குமரன் (29) ஆகிய இருவரிடமும் விசாரித்தனர். அப்போது, இலங்கை நாட்டைச் சேர்ந்த இருவரும் தமிழகம் வந்து திருச்சி சமயபுரத்தில் தங்கி இருந்ததும், பின்னர், போலி சான்றுகளை கொடுத்து இலங்கை நாட்டினர் என்பதை மறைத்து இந்திய பாஸ்போர்ட்டை பெற்று அதன் மூலம் இலங்கை தப்பிச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் விமான நிலைய அதிகாரிகள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

x