திண்டுக்கல்: போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்ற இலங்கைத் தமிழர்கள் மூன்று பேர், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஒருவர் என நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த சிலர் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மறுவாழ்வு முகாம் தனி வருவாய் ஆய்வாளர் மனோகரன் அளித்த புகாரில், வத்தலகுண்டு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த ஜெகதீபன்(24), ஸ்டீபன்ஸ்டேன்லி(30), பாலதாஸ்(42) ஆகியோர் வத்தலகுண்டு பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து வந்ததும், இவர்கள் மூவரும் சென்னையைச் சேர்ந்த பிரிட்டோ(34) என்பவர் மூலம் இந்திய குடியுரிமைக்கான போலியான ஆவணங்களை தயாரித்து, கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.
இலங்கை குடியுரிமையை மறைத்து இந்திய குடியுரிமையுள்ளது போல் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்ற ஜெகதீபன், ஸ்டீபன், பாலதாஸ் ஆகியோரையும், இவர்களுக்கு உறுதுணையாக இருந்த சென்னையை சேர்ந்த பிரிட்டோவையும் போலீஸார் கைது செய்தனர்.