கணக்கில் வராத ரூ.3.75 லட்சம் பறிமுதல்: விருதுநகர் கலால் உதவி ஆணையரிடம் விடிய விடிய விசாரணை


விருதுநகர்: கலால் உதவி ஆணையரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.3.75 லட்சத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், அவரிடம் நேற்று விடிய விடிய விசாரணை நடத்தினர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 4-வது தளத்தில் கலால் உதவி ஆணையர் அலுவலகம் இயங்கி வருகிறது. உதவி ஆணையராக திருச்சியை சேர்ந்த கணேசன் (59) பணியாற்றி வருகிறார். இவர் தனியார் மதுக்கூட உரிமையாளர் களிடம் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கலால் உதவி ஆணையர் தனது காரில் திருச்சிக்கு புறப்பட்டார்.

விருதுநகர் - மதுரை சாலையில் சத்திரரெட்டியபட்டி விலக்குப் பகுதியில் அவரது காரை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வைத்திருந்த கணக்கில் வராத ரூ.3.75 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர், விருதுநகர் கலால் உதவி ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து சென்று அவரிடம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நேற்று அதிகாலை 5 மணி வரை விசாரணை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து, திருச்சி விமான நிலையம் அருகே இ.பி. காலனியில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். இச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கலால் உதவி ஆணையர் கணேசன் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x