லாரி ஓட்டுநரிடம் பணம் பறிப்பு: தஞ்சை ஆர்டிஓ ஓட்டுநர் உட்பட 2 பேர் கைது


தஞ்சாவூரில் ஜல்லி ஏற்றி வந்த லாரியை நிறுத்தி, ஓட்டுநரிடம் ஆர்டிஓ என மிரட்டி பணம் பறித்த ஆர்டிஓ ஓட்டுநர் உட்பட 2 பேரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

மயிலாடுதுறை இலுப்பப்பட்டு வையாபுரி திடல் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி லாரன்ஸ் (32). இவர், 3 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் இருந்து நன்னிலத்துக்கு லாரியில் ஜல்லி ஏற்றிக்கொண்டு சென்றார். லாரியில் கிளீனராக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் (20) சென்றார்.

தஞ்சாவூர்- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விமானப் படைத் தளம் அருகில் சென்றபோது, பின்னால் வந்த ஒரு கார், லாரியை வழி மறித்தது. அதில் இருந்து இறங்கி வந்த ஒரு நபர், ஓட்டுநர் பாரதி லாரன்ஸிடம் வந்து, லாரியின் பர்மிட் குறித்து கேட்டுள்ளார். பின்னர், காரில் வட்டார போக்குவரத்து அலுவலர்(ஆர்டிஓ) இருப்பதாகவும், அவரை வந்து பார்க்கும்படியும் கூறியுள்ளார்.

மேலும், தன்னை ஆர்டிஓ கார் ஓட்டுநர் எனக் கூறிய அந்த நபர், திடீரென பாரதி லாரன்ஸ் சட்டைப்பையில் வைத்திருந்த ஓட்டுநர் உரிமம் மற்றும் ரூ.16,500 ரொக்கத்தை எடுத்துக்கொண்டு, வேகமாக காரில் ஏறிச் சென்றுவிட்டார். அவருடன் மற்றொரு நபரும் இருந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

தொடர்ந்து, தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸில் பாரதி லாரன்ஸ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், பாரதி லாரன்ஸிடம் பணத்தை பறித்துச் சென்றது தஞ்சாவூர் வட்டார போக்குவர அலுவலரின் கார் ஓட்டுநர் விவேகானந்தன் (49), வட்டார போக்குவரத்து அலுவலக ஏஜென்ட் மாதவன் (39) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

x