தூத்துக்குடி: தூத்துக்குடியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் 2000 லிட்டர் மானிய விலை டீசல் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார், இருவரை கைது செய்தனர்.
தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில், மீராசா என்பவருக்கு சொந்தமான குடோனில் சட்டவிரோதமான பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நகர துணை கண்காணிப்பாளர் மதனுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் இன்று (மார்ச் 8) தனிப்படை போலீஸார் அந்த குடோனில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பட்டினமருதூர் பகுதியைச் சேர்ந்த மொய்தீன்(40), திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த திலீப்(25) ஆகியோர் இருந்தனர்.
அவர்களிடம் விசாரித்த போது அங்கு இந்திய அரசால், கடலில் பிடிக்கக்கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ள கடல் அட்டைகள் 500 கிலோ இருப்பது தெரியவந்தது. மேலும், மானிய விலையில் மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசல் 2000 லிட்டர் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்த போலீஸார், மொய்தீன், திலீப் ஆகிய இருவரை கைது செய்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
மேலும், மானிய விலை டீசலை உணவு பாதுகாப்பு குழு காவல் துறையிடம், தனிப்படை போலீஸார் ஒப்படைத்தனர். குடோனின் உரிமையாளர் மீராசா என்பவர் மீது ஏற்கெனவே கடல் அட்டை கடத்தல் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.