தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி உயிரிழப்பு - உறவினர்கள் போராட்டம்


தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி மற்றும் குழந்தை இறந்ததை தொடர்ந்து மருத்துவமனை முன்பாக திரண்ட உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி வயிற்றில் குழந்தையுடன் உயிரிழந்தார். இதையடுத்து, அப்பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் இன்று (மார்ச் 8) ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே சிறுபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாகிரா. இவருக்கும் திண்டுக்கல்லைச் சேர்ந்த கோபி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று. இவர்களுக்கு ஏற்கெனவே 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இரண்டாவதாக கருவுற்ற ஜாகிரா பிரசவத்துக்காக சிறுபாடு கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கிருந்து அவர் புதுக்கோட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், சனிக்கிழமை காலையில் ஜாகிராவுக்கு பிரசவ வலி வந்ததை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் புதுக்கோட்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவரை அனுமதித்தனர். ஆனால், அங்கு பிரசவம் பார்க்க மருத்துவர்கள் இல்லாத நிலையில் 2 செவிலியர்கள் மட்டுமே சிகிச்சை அளித்துள்ளனர். இதனால், தாய் மற்றும் சேயின் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக அவரை, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தாயும் சேயும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு, ஜாகிராவின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 5-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதன் காரணமாக ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவர்கள் சுழற்சி முறையில் சென்று பணிபுரிந்து வருவதால் இதுபோன்ற இறப்புகள் நடைபெறுகிறது,” என்று தெரிவித்தனர்.

x