மதுரை: மதுரை மாவட்டத்தில் கண்மாய்களில் இரவு நேரங்களில் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு மணல் அள்ளி, லாரி லாரியாக செங்கல் சூளைகளுக்கு கடத்தி விற்பனை செய்யப்படுவதாகவும், பொதுமக்கள், சமூக ஆர்வலர்களும் வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகளுக்கு புகார் செய்தாலும் அவர்கள் கண்டும், காணாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றை தவிர பிரதான ஆறுகள், சிற்றாறுகள், அணைகள் இல்லை. வைகை பெரியாறு பாசன கால்வாய்கள், கண்மாய் பாசன கால்வாய்களை நம்பியே விவசாயம் நடக்கிறது. கடந்த காலத்தில் கண்மாய்களில் ஆண்டு முழுவதும் பெய்யும் மழைநீர் தேக்கி வைத்து கால்வாய் பாசனம் மூலம் விவசாயிகள் தோட்டக்கலைப்பயிர்கள், நெற்பயிர் விவசாயம் மற்றும் பிற பயிர்கள் சாகுபடி செய்தனர். தற்போது போதுமான மழை பெய்தாலும், கண்மாய்கள், அதன் கால்வாய்கள் போதிய பராமரிப்பு இல்லாததால் விவசாயம் கிராமபுறங்களில் அழிந்து வருகிறது. தொடர்ந்து இரு ஆண்டுகளில் விவசாயம் செய்யப்படாத கிராமங்களில் உள்ள கண்மாய்களில் அதன் மண்வளம் கொள்ளையடிக்கப்படுகிறது.
கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. கண்மாய்கள் மாயமாகி நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்து, அப்பகுதிகள் நிரந்தர வறட்சிக்கு இலக்காகி வருகிறது. இந்த கண்மாய்களில் வரிசையில், கடந்த சில மாதமாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வறட்சிக்கு இலக்கான முடுவார்பட்டி கிராமத்தில் நல்லூர் கண்மாய், ஆதிமூலம் பிள்ளை கண்மாய் ஆகியவையும் சேர்ந்துள்ளது. இந்த கண்மாய்களில் சவுடு மணல் கலந்த வண்டல் மண் அதிகமாக உள்ளது. அதுபோல், அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளிலும் உள்ள கண்மாய்களிலும் செம்மண் கலந்த வண்டல் மண் அதிகமாக உள்ளது. இந்த கண்மாய்களில் இரவு நேரங்களில் ஜேசிபி இயந்திரங்கள், லாரிகளில் வரும் நபர்கள், இரவு முழுவதும் மண் வளத்தை வெட்டி எடுத்து லாரிகளில் கடத்துகிறார்கள்.
இந்த மண், மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள செங்கல் சூளைகளுக்கு கடத்தப்படுவதாகவும், காவல்துறை அதி்காரிகளுக்கும், வருவாய்துறை அதிகாரிகளுக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் தகவல் தெரிவித்தாலும், அவர்கள் கண்டும், காணாமல் கடந்து செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், தொடர்ந்து எந்த வித இடையூறும் தடையின்றியும் மண் வளம் கொள்ளைப்போவது தொடர்கிறது.
இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், ”இரவு 10 மணிக்கு மேல்தான் சொல்லி வைத்தார்பேலா், ஜேசிபி, லாரிகளுடன் 10-க்கும் மெற்பட்ட நபர்கள், முடுவார்பட்டி கிராமத்தில் நல்லூர் கண்மாய், முடுவார்பட்டி ஆதி மூலம் பிள்ளை கண்மாய்களுக்கு வருகிறார்கள். இரவு முழுவதும் தொண்டும் மண்ணை, ஒரு நாளைக்கு 10 லாரிகளில் அள்ளி கடத்துகிறார்கள். இந்த கண்மாய்களில் வண்டல் கலந்த செம்மன், வண்டல் கலந்த மண் ஆகியவை அதிகளவு உள்ளது. செங்கல் சூளைகளில் செங்கல் தயாரிப்பதற்கு ஒரு லாரி செம்மன் ரூ.7 ஆயிரமும், வண்டல் மண் ரூ.7,500-க்கும் விற்பனை செய்கிறார்கள்.
அதுபோல், தனியார் ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்ளும் சாலைப்பணிகளில் பள்ளங்களை நிரப்பவும் மண் வெட்டி கடத்தப்படுகிறது. மண் அள்ளிய கண்மாய் பகுதிகள் தற்போது கட்டாந்தரையாக மாறியுள்ளது. இந்த மணல் கொள்ளை நீடித்தால், அடுத்த தலைமுறையினருக்கும் கமுடுவார்பட்டி கிராமத்தில் நல்லூர் கண்மாய், ஆதிமூலம் பிள்ளை கண்மாய் கண்மாய்கள் இருந்த தடயம் கூட தெரியாமல் பள்ளத்தாக்குகளாக மாறிவிடும்.
மாவட்ட நிர்வாகம், இந்த இரு கண்மாய்கள் மட்டுமில்லாது மாவட்டத்தின் பிற இடங்களில் இதுபோல் மணல் கொள்ளைக்கு பலியாகி வரும் கண்மாய்களை ஆய்வு செய்து, அவற்றை பாதுகாக்கவும், ஆண்டு முழுவதும் பெய்யும் மழை நீரை தேக்கி வைத்து நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கண்மாய்கள் மணல் கொள்ளையின் பின்னணியில் காவல்துறை, வருவாய் துறை மட்டும் இல்லாது அப்பகுதி அரசியல் கட்சியினரும் உடந்தையாக இருப்பதால் எழுத்து மூலமாக உள்ளூர் மக்கள் புகார் அளிக்க அச்சம் அடைந்துள்ளனர்” என்று அவர்கள் தெரிவித்தனர்.