தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே தந்தத்துக்காக யானை கொடூரமாக வேட்டையாடப்பட்ட சம்பவம் தொடர்பாக சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் நெருப்பூர் அடுத்த ஏமனூர் காப்புக்காடு பகுதியில் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோடுபாய் பள்ளம் என்ற இடத்தில் ஆண் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பது கடந்த 1-ம் தேதி வனத்துறையினருக்கு தெரிய வந்தது. வனத்துறையினரின் ஆய்வில் தந்தத்துக்காக யானை வேட்டையாடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
வனத்துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, வேட்டைக் கும்பலைப் பிடிக்க மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தலைமையில் வனத்துறைக்கான சிறப்பு படையினர் அடங்கிய 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒரு குழுவினர் சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்றொரு குழுவினர் சம்பவம் நடந்த பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் தடயங்கள் உள்ளிட்டவற்றை சேகரித்து வருகின்றனர். மூன்றாவது குழுவினர் கர்நாடகா மாநில பகுதிகளில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் என்றனர்.
மேலும், குறிப்பிட்ட நாளில் யானை உயிரிழந்து கிடந்த பகுதிக்கு அருகில் இருந்து இயங்கிய செல்போன் எண் ஒன்றை வனத்துறையினர் கண்டறிந்து அதன் மூலமும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்நிலையில், யானை வேட்டை தொடர்பாக சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறி்த்து அவர்கள் கூறியது: யானை, புலி, சிறுத்தை, கரடி போன்ற விலங்கினங்களின் இருப்பு வனப் பகுதியின் ஆரோக்கியத்துக்கான காப்பீடு போன்றது. இந்த விலங்கினங்களை, இயற்கையால் நியமிக்கப்பட்ட வனத்துறை என்றே கூறலாம். இவைகளின் எண்ணிக்கைக் குறையும்போது வனத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரிடம் அச்சம் குறைந்து விடும். அசாத்திய பலம் கொண்ட யானை உள்ளிட்ட விலங்கினங்களை வணிகம், மருத்துவம் போன்ற காரணங்களுக்காக இன்றளவும் வேட்டையாடுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. வேட்டைக் காரர்களால் மட்டுமன்றி இதர காரணங்களாலும் யானைகள் அடிக்கடி உயிரிழந்து வருகின்றன.
ஏமனூர் பகுதியில் கொல்லப்பட்ட யானையின் தந்தங்களை வெட்டி எடுக்க அதன் தும்பிக்கையை வெட்டி வீசியுள்ளனர். பின்னர் தந்தங்களை சேகரித்துக் கொண்டு, அருகில் கிடைத்த விறகுகளை பயன்படுத்தி யானையின் உடலை எரித்து சாம்பலாக்கிவிட அந்த மர்ம கும்பல் முயன்றுள்ளது. கொடூரமாக செயல்பட்ட இந்த கும்பலை விரைந்து கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். மேலும், யானைகள் பாதுகாப்புக்காக தமிழக அரசு சிறப்புத் திட்டங்களை இயற்றி அவற்றை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் வேண்டும். இவ்வாறு கூறினர்.