செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சென்னேரி அடுத்த கருப்பேரி மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் (70). இவருக்கு ரவி (55) மற்றும் கன்னியப்பன் என இருமகன்கள் உள்ளனர். இளைய மகன் கன்னியப்பன் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்நிலையில் இரண்டு வருடங்களாக மது மற்றும் கஞ்சா பழக்கத்திற்க்கு கன்னியப்பன் மகன் காமேஷ் (23) அடிமையாகி மன நலம் பாதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முதல் கத்தியுடன் சுற்றிதிரிந்த காமேஷ் இரவு அவரது தாத்தா நரசிம்மன் உணவு அருந்த வந்துள்ளார். தாத்தா வீட்டிற்க்கு சாப்பிட வந்த போது வீட்டின் முன்பு நின்றிருந்த பெரியப்பா ரவியை தான் வைத்திருந்த கத்தியை கொண்டு சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து, தடுக்க முயன்ற தாத்தா நரசிம்மனையும் காமேஷ் வெட்டியுள்ளார். இருவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் ஓடி வந்த, பக்கத்தினர் படுகாயமடைந்த நரசிம்மன் மற்றும் ரவியை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ரவி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
மேலும் பின் தலையில் வெட்டு காயமடைந்த நரசிம்மனுக்கு மருத்துவர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த செங்கல்பட்டு தாலுகா போலீஸார் தப்பியோடிய காமேஷை தேடி வருகின்றனர்.