தூத்துக்குடியில் ரூ.30 லட்சம் மதிப்பு கடல் அட்டைகள் பறிமுதல்


தூத்துக்குடி: இலங்கைக்கு கடத்துவதற்காக தூத்துக்குடி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான, 800 கிலோ கடல் அட்டைகளை, கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை பகுதியில், தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, புதுக்கோட்டை ஜோதி நகரில் உள்ள கிடங்கில் இன்று காலை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அங்கு 800 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கடல் அட்டைகள் மற்றும் அவற்றைக் கடத்தி வந்த மினி வேனை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக, திரேஸ்புரத்தை சேர்ந்த ஹபீப் ரகுமான் (38), கயத்தாறை சேர்ந்த கண்ணன் என்ற அருணாசலம் (47) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், புதுக்கோட்டை பகுதியில் கடல் அட்டையைப் பதப்படுத்தி, கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. கடல் அட்டைகளின் இலங்கை மதிப்பு ரூ.30 லட்சம் என்று கூறப்படுகிறது.

இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினமாக கடல் அட்டைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, இதைப் பிடிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது. கடல் அட்டைகளுக்கு சில நாடுகளில் அதிக வரவேற்பு இருப்பதால், அவை சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு கடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

x