மதுரை: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற புகார்களில் தீவிர புலனாய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என மதுரையில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் கூறினார்.
தமிழக காவல் துறை இயக்குநர் (டிஜிபி) சங்கர் ஜிவால் நேற்று மதுரை வந்தார். மதுரை, விருதுநகர் மற்றும் சிறப்பு புலனாய்வு, உளவுப்பிரிவு காவல் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து 2வது நாளாக மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை நடந்த காவல்துறை யினருக்கான குறைதீர்ப்பு முகாம் டிஜிபி பங்கேற்றார்.
அப்போது, பணி மாறுதல், பதவி உயர்வு, தண்டனை விதிப்பு ரத்து போன்ற பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மதுரை மாநகர், மதுரை மாவட்டம், விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 180 க்கும் மேற்பட்ட காவல்துறையினரிடம் மனுக்கள் வாங்கினார். இம்மனுக்கள் குறித்து நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி பரிந்துரை செய்தார்.
தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் செண்பகப்பூ மரக்கன்றுக்களை அவர் நட்டார். இதன்பின், மதுரை மாநகர் , மதுரை மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கஞ்சா வழக்கில் தண்டனை பெற்று கொடுத்தல், குற்றத் தடுப்பு, சிறந்த புலனாய்வு போன்ற சிறந்த பணிகளுக்கென மதுரை மாவட்ட கூடுதல் டிஎஸ்பி கருப்பையா, மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் ஆய்வாளர் பூமிநாதன், கஞ்சா தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் முருகன், சைபர் கிரைம் ஆய்வாளர் பிரியா, மதுரை மாநகர நுண்ணறிவு பிரிவு சிறப்பு எஸ்ஐ அமர்நாத் உள்ளிட்ட 43 காவல்துறையினருக்கு நற்பணிக்கான சான்றிதழ்,ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார்.
இதில் மதுரை மாநகரத்தில் 13 பேரும், மதுரை மாவட்டம், விருதுநகரில் தலா 15 பேரும் இடம் பெற்றனர். விழாவுக்கு முன்னதாக டிஜிபி சங்கர் ஜிவால் பேசியது: ''சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றங்களை தடுப்பது குறித்து ஆய்வு நடத்தினோம். சிறந்த பணிக்காக காவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கியுள்ளோம். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இது ஒரு மகிழ்ச்சியான தினம். இத்துறையில் நன்றாக பணிபுரிந்தால் விருது வழங்கப்படும். பொதுவாக சட்டம், ஒழுங்கு குற்றத்தடுப்பு குறித்து ஐஜி , டிஐஜி, எஸ்பிக்கள் போன்றவர்களுடனே ஆய்வு நடத்துவோம்.
தற்போது கூடுதல் டிஎஸ்பி, டிஎஸ்பிக்களுடனும் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். காவல்துறையை பொறுத்த வரையில் ஒருசில விஷயங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் புகார் பெறுதல், விசாரணை செய்தல், நீதிமன்ற விசாரணை, தண்டனை பெற்று தருவது போன்ற பணிகளை கவனிக்கவேண்டும். குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தீவிர புலனாய்வு செய்து நடவடிக்கை எடுப்பதில் முக்கியத்துவம் காட்டவேண்டும். ரவுடிகளை ஒழிக்க கூடுதல் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் இது தொடர்பான வழக்குகளில் தண்டனை பெற்று தர முனைப்பு காணவேண்டும்.
போதைப்பொருள் தடுப்பிலும் அதிக அக்கறை செலுத்தவேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து மதுபானங்களை கடத்தல் குறித்து முன்கூட்டி தகவல் அறிந்து தடுக்கவேண்டும். தென்மண்டலத்தில் போதைப் பொருள் தடுப்புப் பணியை காவல்துறையினர் ஏற்கெனவே சிறப்பாக கையாண்டுள்ளனர்.ஆனாலும், மேலும் தீவிரப்படுத்தவேண்டும். சைபர் கிரைம் குற்றம் என்பது கடந்த 10 ஆண்டுக்கு முன்பு ஒரு புகார் வந்த நிலையில், தற்போது 100 ஆக அதிகாரித்துள்ளன. இது தொடர்ந்து அதிகரிப்பதால் தடுப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் தேவை ஏற்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கான நலனிலும் அக்கறை செலுத்தவேண்டும். காவலர் முதல் சிறப்பு எஸ்ஐ வரையிலும் அவர்களுக்கு நாம் என்னென்ன உதவிகளை செய்ய வேண்டும், செய்கிறோம் என, 26 தகவல்கள் உள்ளன. இது குறித்து தமிழிலுள்ள விவரங்களை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினருக்கான நலன் வேண்டி வழங்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றிய தகவல்களும் சேகரிக்க உத்தரவிட்டுள்ளோம்.'' என்று டிஜிபி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா, மாநகர காவல் ஆணையர் லோகநாதன், காவல் கண்காணிப்பாளர்கள் அரவிந்த் (மதுரை) கண்ணன் (விருதுநகர் ), மாநகர காவல் துணை ஆணையர்கள் அனிதா, இனிகோ திவ்யன் , ராஜேஸ்வரி, வனிதா மற்றும் மதுரை ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், அரசு மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஷ்குமார் மற்றும் வனத்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். இவர்களுக்கு காவல்துறை சார்பில் டிஜிபி புத்தகங்கள் வழங்கினார்.