சிறுமியை சென்னைக்கு கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டு சிறை - புதுச்சேரி கோர்ட் தீர்ப்பு


புதுச்சேரி: காதலிப்பதாகக் கூறி சிறுமியை சென்னைக்கு கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சினிமா துறை பணியாளருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையை புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் இன்று விதித்தது.

புதுச்சேரி கண்டாக்டர் தோட்டத்தைச் சேர்ந்த சினிமா வெளிப்புற படப்பிடிப்பு ஊழியர் கார்த்திக் (30). இவர் காதலிப்பதாகக் கூறி 17 வயது சிறுமியை சென்னைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே தாம்பரத்தில் வீடு எடுத்து 16.10.22 முதல் 4.11.22 வரை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

சிறுமி கடத்தல் தொடர்பாக ஒதியஞ்சாலை போலீஸில் புகார் பதிவானது. இதையடுத்து போலீஸார் போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறுமியை மீட்டு கார்த்திக்கை கைது செய்தனர். இவ்வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞராக பச்சையப்பன் ஆஜரானார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, போக்சோ சட்டப்பிரிவு 6ன் கீழ் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை கார்த்திக்கு விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு தர அரசுக்கு பரிந்துரைத்தார்.

x