திருவாடானை: முயலை வேட்டையாடிய 2 பேருக்கு ரூ.1.30 லட்சம் அபராதம்


ராமநாதபுரம்: திருவாடானை அருகே முயலை வேட்டையாடியை 2 பேருக்கு ரூ.1.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களிடமிருந்து தோட்டாக்களுடன் கூடிய ஏர்கன் பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம் போலீஸார் நேற்று காலை வட்டாணம் கடற்கரை பாலம் அருகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது இறந்த முயல் மற்றும் தோட்டாக்களுடன் கூடிய துப்பாக்கி (ஏர்கன்) வைத்திருந்த மச்சூர் கிராமத்தைச் சேர்ந்த சேகு அப்துல்காதர் மகன் சர்தார் (35), செய்யதுகான் மகன் முகம்து உசேன் (29) ஆகியோரை கைது செய்து, ராமநாதபுரம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அதனையடுத்து ஆர்.எஸ்.மங்கலம் வனச்சரக அலுவலர், அவர்கள் இருவர் மீதும் வன உயிரின குற்ற வழக்குப் பதிவு செய்தார். இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், மாவட்ட வன அலுவலர் ஹேமலதா, இருவருக்கும் தலா ரூ.65 ஆயிரம் வீதம் ரூ.1.30 லட்சம் அபராதம் விதித்தார். வேட்டையாடப் பட்ட முயலை வன அலுவலர்கள் முறைப்படி அழித்தனர். முன்னதாக அவர்களிடமிருந்து ஏர்கன் மற்றும் 5 பாதரச தோட்டாக்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

இது குறித்து மாவட்ட வன அலுவலர் ஹேமலதா கூறியதாவது: முயலை வேட்டையாடுவது வன உயிரின சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். கைது செய்யப்பட்ட இருவரும் முயலை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம் என தெரியாமல் செய்த காரணத்தால் அபராதம் வசூலிக்கப்பட்டு கடுமையாக எச்சரித்து விடுவிக்கப்பட்டனர். வன உயிரினங்களை வேட்டையாடுபவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவர். யாரேனும் வன உயிரினங்களை வேட்டையாடுவது பற்றி தெரிய வந்தால், வனத்துறையினருக்கு தெரிவிக்கும்படி பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம் என்று கூறினார்.

x