தென்காசி: திருநங்கையாக மாறுவதற்கான அறுவை சிகிச்சையை மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் வீட்டில் வைத்து மேற்கொண்டதில் இளைஞர் உயிரிழந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்த 2 திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே குத்தப்பாஞ்சான் ஊராட்சி பரும்பு ஜேஜே நகரில் 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்களுடன், சாத்தான்குளம் அருகே அரசர்குளத்தை சேர்ந்த சங்கர பாண்டி என்பவரது மகன் சிவாஜி கணேசன் என்ற சைலு (32) என்பவர் கடந்த சில மாதங்களாக தங்கி இருந்தார். இவர் திருநங்கையாக மாற விரும்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிவாஜி கணேசன் என்ற சைலுவை ரத்தப் போக்குடன், திருநங்கைகள் சிலர் நேற்று காலையில் ஆலங்குளம் அரசு மருத்துவமனை யில் அனுமதித்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். கடையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அதிர்ச்சியான தகவல்கள் தெரியவந்தன.
ஆணாக இருந்து திருநங்கைகளாக மாற விரும்புவோருக்கு, பரும்பு பகுதியில் வசிக்கும் திருநங்கைகளான மது மிதா, மகா லெட்சுமி ஆகியோர், மருத்துவ உபகரணங்களின்றி, அறுவை சிகிச்சை செய்துவந்தது தெரியவந்தது. அதன்படியே, சிவாஜி கணேசன் என்ற சைலுவுக்கும் இவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டதில், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு, சைலு உயிரிழந்தது தெரியவந்தது. மது மிதா, மகா லெட்சுமி ஆகிய இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார், அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.