கோயிலை புதுப்பிக்க ரூ.3000 லஞ்சம்: பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில் செயல் அலுவலர் கைது


பெரம்பலூர்: ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மதனகோபால சுவாமி கோயில் செயல் அலுவலரை, பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.

மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் கோவிந்த ராஜு (59). பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில் செயல் அலுவலராக 2 ஆண்டுகளாக இருந்து வருகிறார். இவரது நிர்வாகத்தின் கீழ் 30-க்கும் அதிகமான உப கோயில்கள் உள்ளன.

இந்நிலையில், செங்குணம் கிராமத்தில் உள்ள மிகப் பழமையான பரமேஸ்வரர் கோயிலைப் புதுப்பிக்க விரும்பிய அக்கிராம மக்கள், இதற்கான அனுமதி மற்றும் நிதியுதவி கோரி அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் மூலம் ஆணையருக்கு பரிந்துரை செய்யுமாறு கடந்த ஆண்டு ஜூலை மாதம் செயல் அலுவலர் கோவிந்தராஜுவிடம் விண்ணப்பம் அளித்தனர். ஆனால், அவரோ அந்த விண்ணப்பத்தை உயர் அலுவலர்களுக்கு அனுப்பாமல் கிடப்பில் வைத்துள்ளார்.

இதையடுத்து, செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த ஊர் பிரமுகரான சிவா என்ற சிவநேசன் (28), செயல் அலுவலர் கோவிந்த ராஜுவை நேற்று முன்தினம் அணுகி, அறநிலையத் துறை உயர் அலுவலர்களுக்கு விண்ணப்பத்தை அனுப்பாமல் இருப்பது குறித்து கேட்டுள்ளார். இதற்கு, கோவிந்த ராஜு ரூ.3,000 லஞ்சம் கொடுத்தால்தான் விண்ணப்பத்தை பரிந்துரை செய்வேன் என கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவநேசன், பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகார் செய்தார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாரின் ஆலோசனைப்படி, ரசாயனப் பொடி தடவப்பட்ட லஞ்ச பணத்தை நேற்று பிற்பகல் அலுவலகத்தில் பணியில் இருந்த கோவிந்த ராஜுவிடம் சிவநேசன் கொடுத்தார். அந்தப் பணத்தை கோவிந்தராஜு வாங்கியபோது, அப்பகுதியில் மறைந்திருந்த டிஎஸ்பி ஹேமச்சித்ரா தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் கோவிந்தராஜுவை கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x