கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே மலைக் கிராமத்தில் நடந்த குழந்தைத் திருமணம் வழக்கில் சிறுமியின் தந்தை உட்பட 2 பேரை நேற்று போலீஸார் கைது செய்தனர். மேலும், சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
ஓசூர் அருகே மலைக் கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் (30) என்பவருக்கும் 14 வயது சிறுமிக்கும் கடந்த 3-ம் கர்நாடக மாநிலத்தில் இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடந்தது. இந்நிலையில், திருமணத்தில் விருப்பம் இல்லாத சிறுமி நேற்று முன்தினம் மலைக் கிராமத்தில் உள்ள மாதேஷின் வீட்டில் இருந்து தப்பி உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்தார். இதை அறிந்த உறவினர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக குண்டுகட்டாக மணமகனின் வீட்டுக்குத் தூக்கிச் சென்றனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலானது.
இதையடுத்து, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நேற்று முன்தினம் மாதேஷ், சிறுமியின் தாய் உட்பட 3 பேரைக் கைது செய்தனர். இந்நிலையில், சிறுமியின் தந்தை உட்பட 2 பேரை நேற்று கைது செய்தனர். இவ்வழக்கில் இதுவரை 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், சிறுமியை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர்.