திருநெல்வேலி: திருநெல்வேலியில் கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தவரை கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பாளையஞ்செட்டிகுளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஆதிக்கண் மகன் பெருமாள் என்பவரை அதே பகுதியை சேர்ந்த ராஜன் மகன் செல்வராஜ் தரப்பினர் கொலை செய்ய முயற்சி செய்தது சம்பந்தமாக, தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கில் ராமசுப்பு மகன் வைகுண்டம் (47) என்பவர் செல்வராஜ் தரப்பினருக்கு எதிராக சாட்சியளித்தார். இதனால் செல்வராஜ் தரப்பினர், வைகுண்டம் மீது ஆத்திரமடைந்தனர்.
இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி பாளையஞ்செட்டிகுளத்தில் உள்ள கால்வாயில் வைகுண்டம் குளித்து கொண்டிருந்தபோது, அங்கு சென்ற செல்வராஜ் (43), அந்தோணி ராஜ் என்ற பிரபாகரன் (46), தேவதாஸ் என்பவரின் மகன்களான அருள் பிலிப் (31) மற்றும் ஆன்டோ நல்லையா (28), திரவியம் என்பவரின் மகன் பாபு அலெக்சாண்டர் (41), கோவில்பிச்சை என்பவரின் மகன் ராஜன் (70), ராஜன் மனைவியான லீலா (60), தேவதாஸ் மனைவி ஜாக்குலின் (59) ஆகிய 8 பேரும் சேர்ந்து வைகுண்டத்துடன் தகராறு செய்துள்ளனர்.
தகராறு முற்றியதில் வைகுண்டம் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வைகுண்டத்தின் அண்ணன் முருகராஜ் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தாலுகா காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து செல்வராஜ் உள்ளிட்ட 8 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்து செல்வராஜுக்கு மரண தண்டனையும், அந்தோணி ராஜ், அருள் பிலிப், அன்டோ நல்லையா, பாபு அலெக்ஸாண்டர் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், ராஜன், செல்வலீலா, ஜாக்குலீன் ஆகிய மூவருக்கும் 2 மாதம் சிறை தண்டனையுடன் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பு கூறினார்.