சாத்தான்குளம் தந்தை, மகன் கொலையில் எஸ்ஐ ஜாமீன் மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு


மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், இவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ல் கரோனா ஊரடங்கு நிபந்தனையை மீறி செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக போலீஸாரால் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருவரையும் போலீஸார் காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 9 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் கைதான 9 பேரும் கைதான நாளிலிருந்து மதுரை மத்திய சிறையில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிஐ வழக்கறிஞர் வாதிடுகையில், தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விசாரணை நீதிமன்றத்தில் நீதிபதிகள் குறைவாக உள்ளதால், விசாரணை மற்றும் சாட்சிகள் விசாரணையில் தாமதம் ஏற்பட்டு வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டது.

ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பில், "ரகுகணேஷுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. எனவே ஜாமீன் வழங்கக்கூடாது" என வாதிடப்பட்டது. இதையடுத்து ஜாமீன் மீதான தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்தார்.

x