சென்னை: வங்கியில் ரூ.5 கோடி லோன்வாங்கி தருவதாக கூறி ரூ.29.5 லட்சம் பணத்தை பெற்று மோசடி செய்த ஒரு பெண் உட்பட 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து காவல்துறை தரப்பில் வெளியான செய்திகுறிப்பில், ”சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, பாலு சந்தில் வசித்து வரும் ஈஸ்வர் என்பவர் அவருக்கு தெரிந்த நபரான ஆரோக்கிய அலோசியஸ் என்பவர் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்ய கூறியதன்பேரில், ஈஸ்வர் அவருக்கு பல தவணைகளாக மொத்தம் ரூ.8.5 லட்சம் கொடுத்ததாகவும், பின்னர் ஆரோக்கிய அலோசியஸ், கல்பனா (எ) மாலதி, கனகராஜ் மற்றும் யோகி ஆகியோரை அறிமுகப்படுத்தி வைத்து, கல்பனா (எ) மாலதி என்பவருக்கு ஆக்சிஸ் வங்கியில் அதிகாரிகளை தெரியும் என்றும் இவருக்கு முன்பணம் செலுத்தினால் ரூ.5 கோடி லோன் வாங்கி தருவதாகவும் கூறியதன்பேரில், ஈஸ்வர் 2022ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை இவர்களுக்கு ரொக்கமாகவும், வங்கி கணக்கிலும் என மொத்தம் ரூ.21 லட்சம் பணத்தை கொடுத்ததாகவும், ஆனால் 4 நபர்களும் லோன் வாங்கி தராமலும் பணத்தை திரும்ப தராமலும் ஏமாற்றி வருவதாகவும், ஈஸ்வர் என்பவர் தண்டையார்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தண்டையார்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாணை செய்ததில், மேற்படி 4 நபர்களும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய சொல்லியும், வங்கியில் ரூ.5 கோடி லோன் வாங்கி தருவதாகவும் கூறி மொத்தம் ரூ.29.5 லட்சம் பணம் பெற்று கொண்டு மோசடி செய்தது தெரியவந்ததின்பேரில், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஆரோக்கிய அலோசியஸ், கல்பனா (எ) மாலதி, கனகராஜ் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர்.
விசாரணையில் ஆரோக்கிய அலோசியஸ் மீது ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவில் ஒரு குற்ற வழக்கு உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப் படி சிறையில் அடைக்கப்பட்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.