சென்னை: இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் கத்தியுடன் அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். 3 இளஞ்சிறார்கள், சிறுவர் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”இன்ஸ்டாகிராம் சமூக வளை தளத்தில் ஒரு குறிப்பிட்ட நபரின் பக்கத்தில் 2 வாலிபர்கள் கத்தியுடன் Waiting for 302 என்ற வாசகத்துடன் அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டுள்ளதாக கொடுத்த புகாரின் பேரில், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் ஆயுத தடை சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
புளியந்தோப்பு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சில வாலிபர்கள் முன் விரோதம் காரணமாக மற்றொரு தரப்பினரை மிரட்டுவதற்காக அச்சுறுத்தும் வாசகத்துடன் கத்தியை வைத்துக் கொண்டு இன்ஸ்டா கிராம் சமூக வளைத்தில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டது தெரியவந்தது.
அதன்பேரில், இவ்வழக்கில் தொடர்புடைய விஜய், வ/20, த/பெ.செல்வகுமார், திரு.வி.க நகர், 9வது தெரு, புளியந்தோப்பு, என்பவரை கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 16 வயது மற்றும் 17 வயதுடைய 3 இளஞ்சிறார்களிடம் விசாரணை செய்தனர். அவர்களிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 கத்தி மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் ஒரு இளஞ்சிறார் மீது ஏற்கனவே ஒரு போக்சோ வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரி விஜய் விசாரணைக்குப் பின்னர் நேற்று (05.03.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். 3 இளஞ்சிறார்களும் சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர் செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.