மேட்டூர்: மேட்டூரில் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடியின் இடது கால் முறிந்தது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த காவிரி பாலம் மீனவர் தெருவை சேர்ந்தவர் பூவரசன் (30). வெல்டராக வேலை செய்து வரும் இவர் நேற்று முன்தினம் இரவு காவிரி பாலம் தண்ணித் தொட்டி அருகே மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி ராமச்சந்திரன் (28) கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கேட்டதாக தெரிகிறது. அப்போது, பூவரசன் பணம் இல்லை என கூறிய நிலையில், ரவுடி ராமச்சந்திரன் தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பூவரசன் தலையில் குத்தி விட்டு ரூ.700 எடுத்துக் கொண்டு தப்பிவிட்டார்.
இதில் காயம் அடைந்த பூவரசன் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து மேட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த ராமச்சந்திரனை தேடி வந்தனர்.
இந்நிலையில் சீத்தா மலையில் பதுங்கி இருந்த ராமச்சந்திரனை போலீசார் பிடிக்க சென்றனர். அப்போது, போலீஸார் வருவதை தெரிந்து கொண்ட ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பித்து செல்லும்போது பாறையில் மீது விழுந்ததில் இடது கால் முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் அவரை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்றிரவு அனுமதித்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையை போலீசார் எடுத்து வருகின்றனர். ராமசந்திரன் மீது 2 கொலை முயற்சி, வழிப்பறி, ஆள் கடத்தல், திருட்டு வழக்கு இருப்பது குறிப்பிடதக்கது.