ஓசூர் அருகே மருத்துவம் படிக்காமல் மக்களுக்கு சிகிச்சை அளித்தவர் கைது; கிளினிக்கிற்கு சீல்!


கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே மருத்துவம் படிக்காமல் அலோபதி சிகிச்சை அளித்தவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், கிளினிக்கிற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

ஓசூர் அருகே கதிரேப்பள்ளியில் மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி ஒருவர் பொதுமக்களுக்க் அலோபதி சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் பரமசிவத்துக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராஜீவ் காந்தி தலைமையிலான மருத்துவக் குழுவினர் மற்றும் அட்கோ போலீஸார் நேற்று கதிரேபள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் (51) என்பவர் நடத்தி வந்த கிளினிக்கில் ஆய்வு செய்தபோது, அவர் எம்எஸ்சி படித்து விட்டுக் கடந்த 4 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு அலோபதி சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அங்கிருந்த மருந்து, மாத்திரைகளைப் பறிமுதல் செய்து, கிளினிக்கிற்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். விசாரணையில், கைதான விஸ்வநாதன் கடந்த 2020-ம் ஆண்டு புக்கசாகரம் பகுதியில் கிளினிக் நடத்தி ஏற்கெனவே கைதானவர் என்பது தெரிய வந்தது.

x