திருவாரூர்: அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 மாதங்களுக்கு முன்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் போக்சோ வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் நகர பகுதிக்கு உட்பட்ட கொடிக்கால் பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சீனிவாசன் (51). இவர், அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் 2 மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டில் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், இது குறித்து திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆசிரியர் சீனிவாசனை நேற்று கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை தரப்பட்ட சம்பவத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.