நாமக்கல்: மனைவி, இரு குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கணவர் கரூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் பதி நகரைச் சேர்ந்தவர் பிரேம்ராஜ் (38). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மோகனப் பிரியா (33). மகள் பிரினிதி ராஜ் (6). ஒன்றரை வயது மகன் பிரினீஷ்ராஜ். நேற்று முன்தினம் வீட்டில் இரு குழந்தைகளுடன் மோகனப் பிரியா உயிரிழந்து கிடந்தார்.
மேலும், வீட்டில் இருந்த கடிதத்தில், ‘ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 லட்சம் வரை பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொள்வதாக’ குறிப்பிடப்பட்டிருந்தது. உயிரிழந்தவர்களின் கழுத்தில் காயங்கள் இருந்தன. இதனால், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் அடைந்தனர். மேலும், பிரேம்ராஜ் இல்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பிரேம் ராஜை பிடிக்க ஏஎஸ்பி ஆகாஷ் ஜோஷி தலைமையில் இரு தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். இதனிடையே, கரூர் மாவட்டம் அமராவதி பாலம் அருகே ஓடும் ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் நாமக்கல் போலீஸாருக்கு வந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தியபோது, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டவர் பிரேம்ராஜ் என்பது தெரிந்தது.
இதனிடையே, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் நேற்று மாலை மோகனப் பிரியா மற்றும் இரு குழந்தைகளின் உடல்கள் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்கள் 3 பேரும் எப்படி உயிரிழந்தார்கள் என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.
தற்கொலை தீர்வல்ல...: தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.