காங்கயம் அருகே கரூர் நகை வியாபாரியிடம் போலீஸார் எனக் கூறி ரூ.1.10 கோடி கொள்ளை


காங்கயம் அருகே நகை வியாபாரியிடம் போலீஸார் என்று கூறி ரூ.1.10 கோடியை கொள்ளையடித்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் கீழநஞ்சைய தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(60). நகை வியாபாரியான இவர், அவ்வப்போது கோவைக்கு சென்று நகைகளை வாங்கிவருவது வழக்கம். இதன்படி, நேற்று முன்தினம் மாலை கரூரில் இருந்து கோவைக்கு நகை வாங்குவதற்காக காரில் சென்றுள்ளார். ஓட்டுநர் ஜோதி(60) காரை ஓட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே சம்பந்தம்பாளையம் பகுதியில் வந்தபோது, அவர்களை பின் தொடர்ந்து ஒரு கார் திடீரென வெங்கடேசன் காரை வழிறித்தது. காரிலிருந்து இறங்கி வந்த 4 பேர் தங்களை போலீஸார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, காரில் கஞ்சா கடத்துவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், காலை சோதனையிட வேண்டுமென்றும் கூறியுள்ளனர்.

அப்போது, காரில் இருந்த ரூ.1.10 கோடி குறித்து அவர்கள் கேட்டபோது, நகை வாங்குவதற்காக கோவைக்கு கொண்டு செல்வதாக வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இந்தப் பணத்துக்கான ஆவணங்களை காண்பிக்க வேண்டும் என்று கூறி, காரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து, அவிநாசிபாளையம் வழியாக தாராபுரம் செல்லும் சாலையில் குண்டடம் பிரிவு அருகே அழைத்துச் சென்று, வெங்கடேசன், ஜோதி ஆகியோரைத் தாக்கி, ரூ.1.10 கோடி மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு, அங்கிருந்து தாங்கள் வந்த காரில் தப்பிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன், இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தார். இது தொடர்பாக பல்லடம் டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

x