ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள மலைக் கிராமத்தில் குழந்தைத் திருமணம் நடந்த நிலையில், தப்பிச் சென்ற சிறுமியை தேடிப்பிடித்த உறவினர், குண்டுகட்டாக தூக்கிச்சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. ஓசூர் அருகேயுள்ள மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ்(30). இவருக்கும், 14 வயது சிறுமிக்கும் கடந்த 3-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் மலைக் கிராமத்துக்கு மாதேஷ் மற்றும் சிறுமி வந்தனர்.
இதனிடையே, திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்று கூறி வந்த சிறுமி, நேற்று காலை மாதேஷின் வீட்டிலிருந்து தப்பி, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தஞ்சமடைந்தார். இதையறிந்த மணமகளின் உறவினர்கள் சிறுமி தஞ்சமடைந்த வீட்டுக்குச் சென்றனர். சிறுமியை குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றனர். அப்போது சிறுமி கதறிஅழுதார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதுகுறித்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறுமியின் தாயார் உட்பட 3 பேரை கைது செய்தனர்.