மதுரை: நெல்லை பிசிஆர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சட்டக்கல்லூரி மாணவர் தீபக் ராஜா கொலை வழக்கை விரைந்து முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் வாகைகுளத்தைச் சேர்ந்த முத்துக்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: என் தம்பி தீபக் ராஜா (30). சட்டக்கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 20.5.2024-ல் பாளை கே.டி.சி. நகரில் உணவகம் முன்பு கூலிப்படையால் தீபக் ராஜா வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பாளை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கூலிப்படையை சேர்ந்த 14 பேரை கைது செய்தனர்.
தற்போது அனைவரும் ஜாமீனில் வந்துள்ளனர். எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் 14 பேரும் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். கொலை வழக்கில் உரிய ஆதாரங்களை வழங்கியும் போலீஸார் உரிய நேரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் விட்டுள்னர்.
கூலிப்படை கொலையாளிகள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. பலர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் உள்ளவர்கள். இவர்கள் முந்தைய வழக்கில் ஜாமீனில் வெளியே வந்ததும் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கின் சாட்சியான மாதவன் என்பவரை கொலை செய்தனர். இது தொடர்பாக சென்னை பட்டினம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பல்வேறு வழக்குகளில் சாட்சிகளை மிரட்டியும், கலைத்தும் வருகின்றனர்.
இந்நிலையில் என் சகோதரர் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் ஜாமீனில் வந்திருப்பதால் அவர்கள் என்னையும், சாட்சிகளையும் மிரட்டவும், கலைக்கவும் வாய்ப்புள்ளது. எனவே நெல்லை 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தீபக்ராஜா கொலை வழக்கை விரைந்து விசாரிக்கவும், எனக்கும், குடும்பத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி பி.தனபால் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் இ.பினேகாஸ் வாதிட்டார். பின்னர் நீதிபதி, நெல்லை நீதிமன்றம் தீபக்ராஜா கொலை வழக்கை விரைவில் விசாரித்து முடிக்க வேண்டும். 15 நாட்களுக்கு மேல் ஒத்திவைக்காமல் தொடர்ந்து விசாரித்து விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.