கர்நாடகவுக்கு கடத்த முயன்ற 70 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - கிருஷ்ணகிரியில் 3 பேர் கைது


கர்நாடக மாநிலத்திற்கு லாரிகள், சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற 70 டன் ரேஷன் அரிசியை மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக, கர்நாடக மாநிலத்திற்கு லாரிகள், சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற 70 டன் ரேஷன் அரிசியை மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக, கர்நாடக, ஆந்திரா மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி அதிகளவில் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சேலம் டிஎஸ்பி வடிவேல் தலைமையில், கிருஷ்ணகிரி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், எஸ்ஐ-க்கள் பெருமாள், வள்ளியம்மாள், கதிரவன், போலீஸார் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் பல குழுக்களாக பிரிந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது, ஜக்கேரி பேருந்து நிறுத்தம் அருகில் ராயக்கோட்டை கெலமங்கலம் சாலையில் வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், 50 கிலோ அளவிலான, 468 மூட்டைகளில், 23 ஆயிரத்து 400 கிலோ ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்திற்கு விற்பனைக்காக கடத்தி செல்ல முயன்றது தெரிந்தது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்த தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ராஜகொல்லஹள்ளியை சேர்ந்த ஸ்ரீதரன்(27) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கூறிய தகவல்படி ராயக்கோட்டை தக்காளி மண்டி அருகே சென்ற மற்றொரு லாரியை பிடித்து சோதனையிட்டதில், 50 கிலோ அளவிலான, 19 ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்த ராஜகொல்லஹள்ளியை சேர்ந்த மணி(33) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில், பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசி வாங்கி, மில்லில் பாலீஷ் செய்து வெளி மாநிலங்களில் விற்கும் தொழிலில் ஈடுபட்டது சேலத்தை சேர்ந்த தண்டபாணி(39) என்பதும், அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், பாங்காநத்தம் அருகில் உள்ள மில்லில் பாலீஷ் செய்வதும் தெரிந்தது. அந்த மில்லில் பதுக்கி வைக்கப்பட்ட 27 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியையும், 1 சரக்கு வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் மொத்தமாக, 70 டன் ரேஷன் அரிசியுடன், 2 லாரி, ஒரு சரக்கு வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக தண்டபாணி, ஸ்ரீதரன், மணி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும். பொதுமக்கள், ரேஷன் பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை 1800 599 5950 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்தனர்.

x