சேலம்: ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம் நகராட்சி பதிவேட்டில், வீட்டின் உரிமையாளர் பெயரை மாற்றம் செய்வதற்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற நகராட்சி பில் கலெக்டர் செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் கணபதி (40). இவர், ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரத்தில் வீடு ஒன்றினை வாங்கிய நிலையில், அந்த வீட்டின் உரிமையாளர் என்ற வகையில், நகராட்சி அலுவலகத்தில் அதனை பதிவு செய்யவும், வீட்டின் குடிநீர் இணைப்பின் பெயரை மாற்றவும் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில், நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டராகப் பணியாற்றிய ஆத்தூரைச் சேர்ந்த குணசேகரன் (39) என்பவர், வீட்டின் உரிமையாளர் பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பின் பெயர் மாற்றம் ஆகியவற்றைச் செய்திட, ரூ.25 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என்று கணபதியிடம் கேட்டதாகத் தெரிகிறது. இதனிடையே, லஞ்சம் கொடுக்க விரும்பாத கணபதி, இது குறித்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் தெரிவித்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர்கள் முருகன், நரேந்திரன் ஆகியோர் கூறியபடி, கணபதி ரூ.25 ஆயிரத்தை பில் கலெக்டர் குணசேகரனிடம் கொடுக்கச் சென்றார். ஆனால், பில் கலெக்டர் குணசேகரன், நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்கு வெளியே வரவழைத்து, இருசக்கர வாகனத்தில் பெட்டியில் லஞ்சப் பணத்தை வைக்கச் சொன்னார். அந்த லஞ்சப் பணத்தை இரு சக்கர வாகனத்தில் இருந்து பில் கலெக்டர் குணசேகரன் எடுத்தபோது, அவரை லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் முருகன், நரேந்திரன் ஆகியோர் கையும் களவுமாக கைது செய்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், சேலம் மாவட் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் பில் கலெக்டர் குணசேகரனை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.