நாமக்கல்: வரதட்சனை கேட்டு மனைவியை எரித்துக் கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
பரமத்தி வேலூர் அடுத்த சோழசிராமணி படவெட்டி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம் (37). இவர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார். கடந்த 2016ம் ஆண்டு அக்., மாதம் 6ம் தேதி இரவு முருகானந்தத்தின் மனைவி சுகன்யா (23) வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து சுகன்யா மீது முருகானந்தம் ஊற்றியுள்ளார். அப்போது ஸ்டவ் அடுப்பில் எரிந்து கொண்டிருந்த தீ சுகன்யா மீது பரவியதையடுத்து அவர் படுகாயமடைத்தார்.
தொடர்ந்து அவர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு அவர் அதே ஆண்டு அக்.,10ம் தேதி சி்கிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக ஜேடர்பாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வரதட்சனை கேட்டு கொடுமை செய்ததுடன் சுகன்யா மீது முருகானந்தம் மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த விவரமும் தெரியவந்தது. இதையடுத்து முருகானந்தத்தை ஜேடர்பாளையம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று அந்த வழக்கின் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி மனைவியை எரித்துக் கொலை செய்த முருகானந்தத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.