மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே பட்டா பெயர் மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை (வி.ஏ.ஓ.,) லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகேயுள்ள மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் பணி புரியும் விஏஓ சுப்பிரமணி (59) என்பவரிடம் கடமலைப்புத்தூர் கிராமத்தைச் சார்ந்த பச்சையப்பன் (45) என்பவர் அவரது 10 சென்ட் நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய கிராம வி.ஏ.ஓவை அணுகி உள்ளார். அதற்கு அவர், ஆன்லைனில் விண்ணப்பிக்க கூறியுள்ளார். அதன்படி விண்ணப்பித்த பிறகு மீண்டும் வி.ஏ.ஓ.,வை பச்சையப்பன் தொடர்பு கொண்டார். அப்போது, பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் செலவாகும் என விஏஓ கூறியதாக கூறப்படுகிறது. மேலும், அதனை கொடுத்தால் மட்டுமே பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியும் எனக்கூறியுள்ளார். மேலும், நீண்ட நாட்களாக விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில் இதனை கொடுக்க விரும்பாத பச்சையப்பன், செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனையின்படி ரசாயனம் தடவிய லஞ்சப்பணத்தை பச்சையப்பன் விஏஓவிடம் கொடுத்தார். அதனை வாங்கிய சுப்பிரமணியை அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விஏஓ சுப்பிரமணி என்பவர் அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல், கடந்த 2024 செப் 27ம் தேதி செய்யூர் அருகே தண்டரை கிராம நிர்வாக அலுவலர் சுதாகர் அப்போது, 7,000 ரூபாய் லஞ்சம் கேட்ட போது கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.