ராமநாதபுரம்: நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் ரூ. 5.60 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதில், உதவி கோட்டப் பொறியாளர் உள்ளிட்ட 2 பேர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
ராமநாதபுரம் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் (தரக் கட்டுப்பாடு) அலுவலகத்தில், ஒப்பந்ததாரர்களி டம் இருந்து லஞ்சம் பெறுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி ராமச் சந்திரன், ஆய்வாளர் ராஜேஸ்வரி உள்ளிட்ட போலீஸார் நேற்று முன்தினம் மாலை திடீர் சோதனை நடத்தினர். இரவு வரை நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாக ரூ.5.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக தரக்கட்டுப்பாடு உதவி கோட்டப் பொறியாளர் ரெங்க பாண்டி(46), தற்காலிக கணினி இயக்குபவர் ஜெய சக்கரவர்த்தி (39) ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை எஸ்விபி நகரில் உதவி கோட்டப்பொறியாளர் ரெங்கபாண்டி வீட்டில் நேற்று காலை 7 மணி முதல் மதுரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.