திருப்பத்தூர்: ஏலகிரி மலையில் நடந்த மூதாட்டி கொலை வழக்கில் தந்தை, மகனை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி முத்தானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (80). இவரது மனைவி காந்தா (73). பச்சையப்பன் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இவர்களுக்கு 4 மகன்கள் இருந்தும் காந்தா தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த பிப். 4-ம் தேதி இரவு மூதாட்டி தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர்கள் மூதாட்டியின் கழுத்தை நெரித்துக்கொலை செய்து அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் வீட்டில் இருந்த தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர்.
இது குறித்து ஏலகிரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். சம்பவம் நடந்த இடத்தை வேலூர் சரக டிஐஜி தேவராணி, திருப்பத்தூர் எஸ்.பி., ஷ்ரேயா குப்தா ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டனர்.
தனிப்படை காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மூதாட்டி காந்தாவை கொலை செய்தது ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (42), அவரது மகன் சதீஷ் (20). என்பதும், இவர்கள் காந்தா அணிருந்த தங்க நகைக்காக அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை காவல் துறையினர் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.