திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகேயுள்ள கிராமத்தில், கடந்தாண்டு மே 10-ம் தேதி வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை, அதே கிராமத்தைச் சேர்ந்த சின்ன தம்பி (70), மதன் குமார் (19) ஆகியோர் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதை அதே கிராமத்தைச் சேர்ந்த மதன் (30) செல்போனில் வீடியோ பதிவு செய்து மற்றவர்களிடம் காண்பித்துள்ளார்.
இது குறித்து அச்சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் முசிறி அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மாவட்ட எஸ்.பி. செ.செல்வ நாக ரத்தினம் உத்தரவின் பேரில் சின்னத் தம்பி, மதன் குமார் ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என எஸ்.பி. அலுவலக செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.