மதுரையில் பெண்ணைக் கொன்று உடலை சாக்கு பைக்குள் கட்டி வீசியது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அவனியாபுரம் புறவழிச்சாலை ஈச்சனோடை பகுதியில் கிடந்த கோணி சாக்கு பையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். பெருங்குடி காவல் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். 40 வயது மதிக்கத்தக்க பெண் கொலை செய்யப்பட்டு சாக்கு பைக்குள் கட்டி சாலையோரத்தில் வீசியிருப்பது தெரிந்தது.
தடய அறிவியல் நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் போலீஸார், பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.