நாமக்கல்: நாமக்கல்லில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் பதி நகரைச் சேர்ந்தவர் பிரேம்ராஜ் (38). அங்குள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மோகனப்பிரியா (33), மகள் பிரிநித்தி ராஜ் (6), ஒன்றரை வயது மகன் பிரினிராஜ். இந்நிலையில், நேற்று மதியம் வரை பிரேம்ராஜ் வீட்டிலிருந்து யாரும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, மோகனப் பிரியா மற்றும் அவரது மகள், மகன் இறந்துகிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த போலீஸார் 3 பேரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்த கடிதத்தில், “ஆன்லைன் விளையாட்டு மூலம் ரூ.50 லட்சம் வரை இழந்து விட்டேன். இதை யாரிடமும் சொல்ல எனக்குத் தைரியமில்லை. எனவே 4 பேரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துவிட்டோம். எங்களை மன்னித்து விடுங்கள்” எனக் குறிப்பிட்டு, பிரேம்ராஜ் உள்ளிட்ட 4 பேரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. எனினும், பிரேம்ராஜ் வீட்டில் இல்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்து வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மூவரின் கழுத்திலும் காயங்கள் உள்ளன. மனைவி,மகள், மகனைக் கொன்றுவிட்டு, பிரேம்ராஜ் தலைமறைவாகிவிட்டாரா அல்லது மூவரும் தற்கொலை செய்துகொண்ட பின்னர், பிரேம்ராஜ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து, பிரேம்ராஜை தேடி வருகின்றனர்.