மதுரை: மதுரை காமராஜ் பல்கலைக்கழக பிஎச்டி மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறை சார்ந்த ஆராய்ச்சி படிப்புக்கான (பிஎச்டி) நுழைவுத் தேர்வு கடந்த ஆண்டு செப். 22-ல் நடைபெற்றது. இதில் 1094 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற 50 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆனால் 18 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனால் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாணவர்களுக்கு என்எப்எம் (நார்மலைஷேசன் பார்முலா மெத்தேடு) முறையில் கூடுதல் மதிப்பெண் வழங்க முடிவானது.
இந்நிலையில், பல்கலைக்கழக ஆராய்ச்சி பிரிவு கண்காணிப்பாளர் மற்றும் ஊழியர்கள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை மாணவ, மாணவிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு என்எப்எம் (நார்மலைசேஷன்பார்முலா மெத்தேடு) முறையில் கூடுதல் மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் வழங்கியது உட்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது.இதுதொடர்பாக பேராசிரியர்கள், மாணவர்கள் சார்பில் தமிழக அரசுக்கு நவம்பர் மாத இறுதியில் புகார் அளிக்கப்பட்டது.
இப்புகாரின் பேரில் விசாரணை குழு அமைத்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய பல்கலைக்கழக பதிவாளருக்கு உயர் கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவையடுத்து பிஎச்டி மாணவர் சேர்க்கை முறைகேடு உட்பட 6 குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க பல்கலைக்கழக பயோடெக்னாலஜி துறைத் தலைவர் டாக்டர் டி.கணேஷ் தலைமையில் பேராாசிரியர் எம்.சிவகுமார், உதவி பேராசிரியர்கள் பி.வரலெட்சுமி, ஏ.சிவா, எஸ்.ரோசிதா ஆகியோர் கொண்ட விசாரணை குழுவை அமைத்து பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் ராமகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக பேராசிரியர்கள், மாணவர்கள் சார்பில் தமிழக அரசுக்கு நவம்பர் மாத இறுதியில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் விசாரணை குழு அமைத்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய பல்கலைக்கழக பதிவாளருக்கு உயர் கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டார். இதையடுத்து பிஎச்டி மாணவர் சேர்க்கை முறைகேடு குறித்து விசாரிக்க பல்கலைக்கழக பயோடெக்னாலஜி துறைத் தலைவர் டாக்டர் டி.கணேஷ் தலைமையில் பேராாசிரியர், உதவிப் பேராசிரியர்கள் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் ஓய்வு பெற்ற பேராசிரியரும், வழக்கறிஞருமான வி.கலைச்செல்வன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை காமராஜர் பல்கலைக்கழக பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வில் மாணவர்களை வெற்றிப்பெற வைப்பதற்காக பல்கலைக்கழக அலுவலர்கள் ரூ.1.50 கோடி லஞ்சமாக பெற்றுள்ளனர். இதனால் 1094 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
கருணை மதிப்பெண், தர நிர்ணயம் ஆகியன பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக விதிமுறைகளுக்கு எதிரானது. இந்த முறைகேடு குறித்து விசாரிக்க பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள குழு சரியாக விசாரிக்கவில்லை. இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து பணியில் உள்ளனர். இதனால் விசாரணை குழுவை கலைக்க வேண்டும். எனவே பிஎச்டி மாணவர் சேர்க்கை முறைகேடு குறித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் விசாரணையை 12 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.