கன்னியாகுமரி: பள்ளிகளில் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு திரைப்படம் ஒளிபரப்புவதாக கூறி குமரி மாவட்ட ஆட்சியரின் கையெழுத்தை போலியாக போட்டு மோசடி நடைபெற்ற சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜாண் ஜெகத் பிரைட், நேசமணிநகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், ‘நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு திரைப்படம் ஒளிபரப்புவதாக கடந்த 25ம் தேதி தகவல் கிடைத்தது. அந்த பள்ளிக்கு சென்று நிர்வாகத்திடம் விசாரித்தோம்.
அப்போது, மாற்றுத் திறனாளி ஒருவர் குமரி மாவட்ட ஆட்சியரின் அனுமதி கடிதம், டிக்கெட் ஆகியவை அடங்கிய தபால் கவரை கொடுத்து, பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளிடமும் ரூ.10 வீதம் கட்டணம் வசூல் செய்துவிட்டு அழைக்குமாறும், பின்னர் நாங்கள் வந்து ‘மாணவர்களே மரம் வளர்ப்போம்’ என்ற குழந்தைகள் திரைப்படத்தை திரையிடுவோம் என்று கூறிவிட்டு சென்றதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக நாங்கள் ஆய்வு செய்த போது, குமரி மாவட்ட ஆட்சியரின் கையெழுத்தை போலியாக போட்டு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அரசு முத்திரையை போலியாக தயாரித்து மோசடியாக கடிதம் தயார் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பணம் சம்பாதிக்கும் நோக்கில் பள்ளி மாணவர்களிடம் இருந்து ரூ.10 கட்டண டிக்கெட்டு அச்சடித்து பணம் வசூல் செய்துள்ளனர்.
குமரி மாவட்ட ஆட்சியர் கையெழுத்தை போலியாக போட்டு மோசடி சய்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டிருந்தது. இது தொடர்பாக நேசமணி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.